மிகவும் ஆபத்துள்ள நாடுகளில் பாதுகாப்பாகத் தரவுகளைத் திரட்டுதல்
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களும் ஊடகவியலாளர்களும் பல நேரங்களில் தங்களுடைய அரசாங்கங்களால் துன்புறுத்தப்படுவதற்கான ஆபத்து உள்ளது என்பது துரதிருஷ்டவசமான உண்மை.
இந்தத் துணிச்சலான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள மக்கள்தான் அந்தந்த நாடுகளின் மனித உரிமை வல்லுநர்களாக உள்ளார்கள். அதனால், நாங்கள் அவர்களை எங்களுடைய தரவு திரட்டலில் பங்கேற்கும்படி கேட்கிறோம். எனவே, அவர்களுடைய அடையாளங்களைப் பாதுகாப்பதும், HRMIன் தரவு திரட்டல் செயல்முறையில் பங்கேற்பது அவர்களுக்கு எந்தக் கூடுதல் ஆபத்தையும் கொண்டுவந்துவிடக்கூடிய வாய்ப்பைக் குறைப்பதும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
நீங்கள் உங்களுடைய நாட்டில் எங்களுடைய தரவு திரட்டலில் பங்கேற்பதுபற்றிச் சிந்திக்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுடைய பாதுகாப்பை மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
HRMI தன்னுடைய தரவு திரட்டலின் ஒரு பகுதியாக, இரண்டு வகையான முக்கியத் தகவல்களைத் திரட்டுகிறது. தகவல்களைப் பாதுகாப்பாகத் திரட்டவும் சேமிக்கவும் நாங்கள் ஒரு தெளிவான செயல்முறையை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் உங்களுடைய அடையாளத் தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கிறோம்
முதல் வகை முக்கியத் தகவல், கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடியவர்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்புத் தகவல்கள் ஆகும். நாங்கள் இதை SSL சான்றிதழ் கொண்ட, https மூலம் பாதுகாக்கப்படுகிற ஓர் இணையத் தளத்தில் உள்ள ஓர் இணையப் படிவத்தின் வழியாகச் சேகரிக்கிறோம். அதாவது, பெயர்களும் தொடர்புத் தகவல்களும் இணையத்தில் பயணம் செய்யும்போது அவை மறைகுறியாக்கப்படுகின்றன.
மறைகுறியாக்கப்பட்ட தகவல் எங்களுடைய வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) மென்பொருளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த CRM மிக உயர்ந்த ISO பாதுகாப்புத் தரநிலைகளுக்குச் சான்றிதழ் பெற்றுள்ளது. அனைத்துத் தகவல்களும் மறைகுறியாக்கப்பட்ட வகையில் பெறப்படுவதும் கையாளப்படுவதும் தக்கவைத்துக்கொள்ளப்படுவதும் இதன்மூலம் உறுதியாகிறது. இந்தத் தகவலை நியூசிலாந்தை அடிப்படையாகக் கொண்ட HRMI பணியாளர்களின் ஒரு சிறு குழுவினால் மாத்திரமே அணுக இயலும். இது இணையக் கருத்தாய்வுக்கான இணைப்புகளை அனுப்புவதற்குமட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுடைய நிபுணத்துவம் வாய்ந்த கருத்தாய்வு பதில்களை நாங்கள் பெயரற்றதாக்குகிறோம்
நாங்கள் திரட்டும் இரண்டாவது முக்கிய தகவலானது, வல்லுநர் கருத்தாய்வுக்கான பதில்கள் ஆகும். இந்தத் தகவலும் SSL சான்றிதழ் கொண்ட, https மூலம் பாதுகாக்கப்படுகிற இணைய மென்பொருள் வழியாகத் திரட்டப்படுகிறது. இது கருத்தாய்வின் வழியாகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் தகவல்களையும் மறைகுறியாக்குகிறது.
எந்தப் பதிலை யார் வழங்கினார்கள் என்பது எங்களுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது.
எந்தப் பதிலை யார் வழங்கினார்கள் என்பது எங்களுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது. அத்துடன், இந்தப் பதில்கள் பொது அளவீடுகளாகத் தொகுக்கப்பட்டு எங்கள் இணையத் தளத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னால், இவற்றிலிருந்து மிகவும் நுண்ணுணர்வுள்ள (sensitive) தகவல்களை நீக்குவதற்கான ஒரு செயல்முறையையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.
நாங்கள் வழக்கமாகப் பாதுகாப்புத் தணிக்கைகளை நடத்துகிறோம்
அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு மீறல்கள் மற்றும் இணையத் தாக்குதல்கள் கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடியவர்களுடைய பாதுகாப்பைப் பாதிக்கலாம், அது எங்கள் நற்பெயரைப் பாதிக்கலாம் என்பதால், நாங்கள் இவற்றை வருமுன் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குகிறோம். எங்கள் அமைப்புகளைச் சரியாக வைத்திருக்கவும், நாங்கள் மிகச் சிறந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், நாங்கள் மூன்றாம் நபர் ஒப்பந்ததாரர்களுடன் பணியாற்றுகிறோம். நாங்கள் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். முறையான தணிக்கைகளுக்கு நடுவில், எங்களுடைய கடவுச்சொல் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதற்கான அணிக் கூட்டங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம், இது எவ்வளவு முக்கியம் என்பதை எல்லாரும் அறிந்திருப்பதை உறுதிப்படுத்துகிறோம்.
எங்களுக்குப் பதிலளிப்போர் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் என்ன?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பதிலளிப்போர் எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய ஆபத்தாக நாங்கள் கருதுவது, யாராவது உங்களுடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் தவறாக நுழைந்து, HRMIயிடமிருந்து நீங்கள் ஒரு கருத்தாய்வு இணைப்பைப் பெற்றுள்ளீர்கள் என்பதைக் காண்பதுதான். இதன்மூலம், நீங்கள் எங்களுடைய மனித உரிமைகள் அளவீடுகளுக்குப் பங்களிக்கக்கூடும் என்பதை உங்களுக்கு எதிராகச் செயல்படும் ஓர் அரசு அறியலாம்.
இணையக் கண்காணிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சில உதவிக் குறிப்புகள்
கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடிய, இந்த ஆபத்தைப்பற்றிக் கவலைப்படுகிற நபர்களுக்கு உதவுவதற்கென, உங்கள் இணையச் செயல்பாட்டை மறைப்பது எப்படி என்பதற்கான சில தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
உங்கள் IP முகவரியை மறையுங்கள்
உங்கள் இணையச் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கென உங்கள் IP முகவரியை (உங்கள் கணினி அல்லது தொலைபேசிக்கான தனித்துவமான இணைய முகவரி) மறைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன:
- VPNகள் (மெய்நிகர் தனியார் வலைப்பின்னல்கள்)
VPN என்பது உங்களுடைய தனிப்பட்ட IP முகவரியிலிருந்து வேறுபட்ட ஒரு பொது IP முகவரியை உங்களுக்கு வழங்குகிறது.
உங்களுடைய உலாவியின் வழியாகச் செல்லும் தரவுப் போக்குவரத்தை மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்தக் கருவியையும் பாதுகாப்பதற்கு VPNகளை அமைக்கலாம். அதாவது, உங்கள் கருவியில் இணையத்தைப் பயன்படுத்துகிற மற்ற செயலிகளையும் (மேசைக் கணினி மின்னஞ்சல் மென்பொருள் போன்றவை) உங்கள் VPN பாதுகாக்கும். சில VPNகளைப் பயன்படுத்துவதே ஆபத்தாக அமையக்கூடும்.
• சில இலவசத் தெரிவுகள்: Proton VPN, TunnelBear (500MB வரை), Hideme (10GB வரை).
• பணம் செலுத்திப் பயன்படுத்தக்கூடிய சில தெரிவுகள்: Express VPN, NordVPN, Surfshark.
நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி, சில நாடுகள் VPN பயன்பாட்டை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றன, அவற்றைத் தரவிறக்குவதை இன்னும் கடினமாக ஆக்க முயல்கின்றன, சில சூழ்நிலைகளில் VPNகளைச் சட்டவிரோதமானதாகக்கூட ஆக்கிவிடுகின்றன.
நீங்கள் வெவ்வேறு VPNகளை ஒப்பிடுவதற்கு இங்கு மற்றும் இங்கு செல்லலாம்.
- Tor உலாவி
Tor உலாவி என்பது நீங்கள் உங்கள் கணினியில் பதிவிறக்கக்கூடிய இலவச மென்பொருளாகும்.
இதன்மூலம் நீங்கள் Tor மென்பொருளைப் பயன்படுத்தலாம். அது உங்களுடைய தகவல் தொடர்புகளைத் தன்னார்வலர்களால் இயக்கப்படுகிற உலகளாவிய அஞ்சல் அனுப்பல்களின் வலைப்பின்னலில் திருப்பித் திருப்பி அனுப்புகிறது, உங்களுடைய இணையச் செயல்பாட்டை நீங்கள்தான் நிகழ்த்தினீர்கள் என்பதைக் கண்டறிவதைக் கடினமாக்குகிறது.
தனிப்பட்ட WiFiஐப் பயன்படுத்துதல்
கீழே இணைக்கப்பட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்களின் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளபடி, பொது WiFi இடங்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது. அதைவிட இன்னும் பாதுகாப்பான தெரிவு, உங்களிடம் ஒரு நல்ல மொபைல் திட்டம் (அல்லது, உங்கள் நாட்டில் சட்டைப்பை WiFi அனுமதிக்கப்பட்டால், அது) இருந்தால், உங்கள் மொபைல் தொலைபேசியிலிருந்து ஒரு ஹாட் ஸ்பாட்டை உருவாக்கி, உங்கள் மடிக்கணினி அல்லது கணினியுடன் இணைத்தல். ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் வலுவான கடவுச்சொல் ஒன்றைப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தரவைப் பயன்படுத்த இயலாது. அத்துடன், வேலை நிறைவடைந்ததும் மறக்காமல் ஹாட் ஸ்பாட்டை அணைத்துவிடுங்கள்.
புத்திசாலித்தனமாக தேடுங்கள்
நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது, பெரும்பாலான உலாவிகள் (எடுத்துக்காட்டாக, Chrome, Safari, Firefox, Explorer போன்றவை) நீங்கள் இணையத்தில் எதைத் தேடுகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதைக் கவனிக்கின்றன, குறித்துவைக்கின்றன.
நீங்கள் நுண்ணுணர்வான (sensitive) எதையாவது செய்யும்போது, உங்கள் உலாவியைத் ‘தனிப்பட்ட பயன்பாட்டு (private)’ உலாவல் அல்லது ‘மறைநிலை (incognito)’ உலாவல் என்று அமையுங்கள். அத்துடன், உங்கள் தகவல்களைப் பதிவு செய்யாத அல்லது உங்கள் உலாவி வரலாற்றைத் தக்கவைக்காத, பாதுகாப்பான தேடல் இயந்திரம் (search engine) ஒன்றைப் பயன்படுத்துங்கள் (எடுத்துக்காட்டாக, DuckDuckGo).
இன்னோர் உதவிக் குறிப்பு என்னவென்றால், நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தியபிறகு, மறக்காமல் உங்கள் உலாவியிலிருந்து குக்கீஸை அழிப்பது. குக்கீஸ் என்பவை உங்களுடைய இணைய உலாவியில் சேமிக்கப்படும் சிறிய உரைக் கோப்புகளாகும். இவற்றில் வெவ்வேறு இணையத் தளங்களுடனான உரையாடல்களைப் பற்றிய தகவல் இடம்பெறும். ஒவ்வோர் உலாவியும் வெவ்வேறு வகைகளில் குக்கீஸை அழிக்கும். இதை நீங்கள் இணையத்தில் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் ‘Safariயில் குக்கீஸை அழித்தல்’ என்றோ அதுபோல் வேறுவிதமாகவோ தேடினால் போதும். Chromeக்கான அறிவுறுத்தல்கள் இங்கு உள்ளன.
மறைகுறியாக்கத்துடன் செயல்படும் பாதுகாப்பான மின்னஞ்சலைப் பயன்படுத்துங்கள்
HRMIயில் உள்ள எங்களுடன் பேசுவதற்கு ஒரு தனியான, பாதுகாப்பான மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்துவதும் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு நல்ல வழியாகும்.
ProtonMail போன்ற பல சேவைகள் இதற்கு உதவுகின்றன. இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்குமுன் உங்கள் உலாவியைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்கேற்ப (மேலே விளக்கப்பட்டுள்ளபடி) அமைப்பது மிகச் சிறந்தது. இவற்றை அமைக்கும்போது தனிநபர் தகவல்களைப் பயன்படுத்தவேண்டாம்.
பொதுவான நல்ல பழக்கங்கள்
உங்கள் கருவிகளில் நல்ல இணையத் தூய்மை (cyber hygiene) இருப்பதை உறுதிசெய்யுங்கள் (கணினிகள் மற்றும் தொலைபேசிகள் ஆகிய இரண்டிலும்)
நம்பக்கூடிய, நல்ல இணையத் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டுவருகிற கருவிகளைமட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் இயங்கு செயலிகள் (operating systems) மற்றும் செயலிகளின்(apps) சமீபத்திய பதிப்பைப் புதுப்பித்து, அவற்றை மட்டும் இயக்குங்கள்.
நல்ல தரநிலைச் செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்
நீங்கள் அறையிலிருந்து வெளியேறுமுன், எப்போதும் உங்கள் திரையைப் பூட்டிவிட்டு வெளியேறுங்கள். மென்பொருள் மற்றும் செயலிகளுக்குப் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது, உடனடியாக அவற்றை புதுப்பிக்கவும். உங்கள் தகவல்கள் எதிர்பாராதவிதமாக வேறொருவருக்குக் கிடைத்துவிடுகிற வாய்ப்பைக் குறைக்க, செயலிகளை மூடுகிற, அவற்றிலிருந்து வெளியேறுகிற பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள்.
‘எட்டிப் பார்க்கிறவர்களை’த் தடுத்துவிடுங்கள்
‘எட்டிப் பார்க்கிறவர்’ என்பவர், நீங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது உங்கள் கணினித் திரையைப் பார்த்துத் தகவல்களைப் பெறுகிறவர். உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, நீங்கள் உங்களுடைய முதுகு ஒரு சுவரை நோக்கியிருக்கும்படி அமரலாம், அல்லது, எட்டிப் பார்க்கக்கூடியவர்களிடமிருந்து உங்கள் திரையை விலக்கித் திருப்பலாம்.
வைரஸுக்கு எதிரான பாதுகாப்பைப் பயன்படுத்துங்கள்
உங்கள் கருவியில் வைரஸுக்கு எதிரான மென்பொருள் நிறுவப்பட்டிருப்பதை உறுதிசெய்யுங்கள்.
பல காரணி அங்கீகாரம் (multi-factor authentication) மற்றும் கடவுச்சொல் மேலாண்மையைப் பயன்படுத்துங்கள்
உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைக்க மேலும் இரண்டு வழிகள்:
- பல காரணி அங்கீகாரம் (multi-factor authentication). இதில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு போன்ற ஒரு சேவை உங்களுடைய கடவுச்சொல்லையும் கேட்கும், அத்துடன், உங்கள் தொலைபேசி அல்லது உங்கள் அங்கீகாரச் செயலிக்குத் தனிக் குறியீடு ஒன்றையும் அனுப்பும். SMS/உரைச் செய்தி அடிப்படையிலான பல காரணி அங்கீகாரத்தைவிட, FreeOTP, Google Authenticator அல்லது LastPass Authenticator போன்ற அங்கீகார ஸ்மார்ட்ஃபோன் செயலிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். பல சேவைகளில், நீங்கள் உங்கள் கணக்கை அமைக்கும்போது, நீங்கள் இதை இயக்க விரும்புகிறீர்களா என்று உங்களிடம் கேட்கப்படும். இந்தத் தெரிவு வழங்கப்படும் இடங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்துங்கள் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
- போன்ற கடவுச்சொல் மேலாளர் செயலிகளைப் பயன்படுத்தி, நீங்கள் சிக்கலான கடவுச்சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை.
எங்கள் பாதுகாப்புக் கொள்கைபற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து, இங்கு கிளிக் செய்யுங்கள். முன்களப் பாதுகாப்போரும் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இந்த மிகச் சிறந்த உதவிக் குறிப்புச் சுருக்கத்தை வழங்குகிறார்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் பாதுகாப்புக் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், தயவுசெய்து, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.